தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னரே வாய்ப்பு

டிசம்பர் மாதம் வரை பருவமழை தொடர்பான பணிகள், இடைத்தேர்தல்கள் மற்றும் பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளன.
தள்ளிப்போகும் தமிழக உள்ளாட்சி தேர்தல்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னரே வாய்ப்பு
Published on: 
Summary

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. வார்டு வரையறை, மழை கால பணிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான மிக முக்கிய நகர்வுகள் தற்போது வெளியாகி உள்ளன.

மாநிலத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு நடத்தப்படும் என்று அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதவி காலம்

தற்போது உள்ளாட்சி நிர்வாக அலகுகளை மறு சீரமைப்பது, வார்டுகளை வரையறை செய்வது மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து இந்த 9 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அரசு தனி அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் பதவி காலம் அன்றைய தினமே தொடங்கியதாக அறியப்படுகிறது. இதேபோல கடந்த ஆண்டு ஜனவரி மாதமே பதவி காலம் முடிந்த மற்ற 28 மாவட்டங்களில் உள்ள தனி அதிகாரிகளின் பதவி காலமும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 19 தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

வார்டு வரையறை பணி

இந்த மாற்றங்கள் குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், புதிதாக உருவாக்கப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை பணிகள் நிலுவையில் உள்ளன. மேலும் டிசம்பர் மாதம் வரை பருவமழை தொடர்பான பணிகள், இடைத்தேர்தல்கள் மற்றும் பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளன. இதன் காரணமாகவே மார்ச் மாதத்துக்கு முன்பாக தேர்தல் நடத்த முடியாது என்றார்.

பதவி காலம் முடிவு

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிகிறது. இதே நேரத்தில் 37 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அக்டோபர் 19-க்கு முன் நடத்த முடியாது என்று ஊரக வளர்ச்சி ஆணையர் இந்த மாத தொடக்கத்தில் அரசுக்கு தெரிவித்து இருந்தார்.

மேலும் 46 கிராமப்புற உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைப்பது, விரிவாக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளை அறிவிப்பது, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் பணிகள் நிலுவையில் உள்ளன. 2024-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மறுசீரமைப்பு பணிகள் முடிந்த பிறகே கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. அதுவரை கிராமங்களின் நிர்வாகம் தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com