

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை மீது சுடர் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நவம்பர் 20-ந்தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள அளவைக் கல் மீது சுடர் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
நாளை கார்த்திகை நாளில் ஒரு நாள் மட்டும் அளவைக் கல்லில் சுடர் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. இதுவரை வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991,வேறொரு சட்டத்தால் ரத்து செய்யப்படவும் இல்லை, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படவும் இல்லை.
எனினும் அச்சட்டத்தை மீறி உச்ச நீதிமன்றம் அளவைக் கல் மீது ஒரு நாள் மட்டும் சுடர் ஏற்ற வழங்கி உள்ள உத்தரவு தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும்.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
பல்லாயிரமாண்டு பழமையான வைகை ஆற்றங்கரை மதுரை மண், தமிழர்களின் தொல் நாகரீகத்தின் உன்னத அடையாளம். மத நல்லிணக்கத்தின் தொட்டில் ஆகும்.
எனவே மதுரை-திருப்பரங்குன்றம் மத நல்லிணக்க மரபை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடு உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.