

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கச்சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், வெள்ளி பூத, அன்ன, சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை 7.25 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் மற்றும் வைர கிரீடம் சாற்றி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, விழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தேரோட்டம் நாளை மறுநாள் காலை நடைபெற உள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு மேல் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை தீபக் காட்சியும் நடைபெற உள்ளது.
மலை மேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில், ஆண்டுதோறும் 4 அடி உயரம், மேல் பகுதி இரண்டரை அடி அகலம், அடிப்பகுதி ஒன்றே முக்கால் அடி அகலம் மற்றும் 70 கிலோ எடை கொண்ட தாமிரக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதில் 400 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியால் தயாரிக்கப்பட்ட திரி மற்றும் 5 கிலோ சூடம் பயன்படுத்தப்பட்டு மகா தீபம் ஏற்றப்படும்.
இதற்கிடையே, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 24-ந்தேதி ஒரு நாள் மட்டும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது வழக்கமாக தீபம் ஏற்றப் படும் பழைய தாமிரக் கொப்பரையைச் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதுடன் பொதுமக்கள் தீபம் ஏற்றும் இடத்துக்கு செல்வதற்கு தடை விதித்து உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை நேற்று முன் தினம் பிறப்பித்த நிலையில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு ஐகோர்ட்டு மலைத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து இருந்தது. ஆனால் அதனை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதுபோன்ற சூழலில் தான் சுப்ரீம் கோர்ட்டு இந்த ஆண்டு தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவை மதிக்காத மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை ஐகோர்ட்டு கண்டித்திருந்தது. யாருடைய உத்தரவின் பேரில் நீங்கள் செயல்பட்டு இருந்தீர்கள் என்கிற கேள்வியையும் ஐகோர்ட்டு எழுப்பி இருந்தது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறி உள்ளார். இதனால் நாளை மறுநாள் கார்த்திகை தீப திருநாளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்பது கேள்விக்குறியாகவும் மாறி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசும் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
தீபத்தூணில் கொப்பரை மூலம் தீபம் ஏற்றப்படுமா? அல்லது வேறு ஏற்பாடுகள் செய்யப்படுமா? என்பது பற்றி அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும் எனக் கோவில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகா தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டுப் பாதை மற்றும் பழனி ஆண்டவர் கோவில் தெரு ஆகிய பகுதிகளின் முன்புறம் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நேற்று முதல் போலீசார் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்பரங்குன்றம் கோவி லில் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களின் ஆதார் அட்டை எண், முகவரி என விசாரணை செய்துவிட்டு அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்பு வழக்கம்போல் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு, பழைய மற்றும் புதிய படிக்கட்டுப் பாதைகள், தீபம் ஏற்றும் பகுதி, தர்கா மற்றும் தீபத்தூண் பகுதி என அனைத்து இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.