

அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டார்.
மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.
* வெளிநாட்டில் படிக்கும் மாணவருக்கு ஆண்டிற்கு கல்வி கட்டணம், வாழ்க்கை செலவினம், இதர செலவினங்கள் என ரூ.36 லட்சம் வழங்கப்படுகிறது.
* மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் வழங்கப்பட்டது.
* முதலாமாண்டு தொகைக்கான செலவின வவுச்சர்களை வழங்காமல், 2-ம் ஆண்டுக்கான தொகையை மாணவர் கோரினார்.
* இருப்பினும் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டதோடு, இதர செலவினங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டது.
* 20-8-2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் இல்லை.
* மேலும், மாணவர் பயிலும் மலேசிய தேசிய பல்கலை. பதிவாளரிடம் விளக்கம் கேட்டு நேற்று (17-9-2026) இ-மெயில் அனுப்பப்பட்டது.
* பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
* மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் மாணவர் காணொளி மூலம் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவு செய்துள்ளார்.
* வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணக்கர்களில், பாரதிதாசன் தவிர வேறு யாரிடமும் இருந்து புகார்கள் இல்லை.
* மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதோடு, கல்வி திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
* ரூ.37 லட்சத்திற்கான பில் அனுப்பினேன், ரூ.36 லட்சம் உதவித்தொகை தந்தார்கள். பில் அனுப்பவில்லை என மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டுகிறார்கள்.
* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.
திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக அமைச்சர் வன்னியரசு புகார் கூறியிருந்த நிலையில் மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.