சபரிமலை பக்தர்களுக்காக 16-ந்தேதி முதல் சொகுசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.
சிறப்பு பஸ்கள்
Published on: 

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின்போது தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் வருகிற 16-ந் தேதி முதல் ஜனவரி 17-ந்தேதி வரையில் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர், ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள், ஏ.சி. பஸ்கள், குளிர்சாதனம் இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

டிசம்பர் 27 முதல் 30-ந் தேதி மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல் 29-ந்தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும். 60 நாட்களுக்கு முன்னதாக இந்த சிறப்பு பஸ்களுக்கு ஆன்லைன் www.tnstc.in மற்றும் TNSTC அலுவலக ஆப் மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

X