சிக்னல் கோளாறு: சென்னையில் புறநகர் மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்; பயணிகள் கடும் அவதி!

தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
Suburban electric train
Published on
Summary

தாம்பரம் வழியே சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் முக்கிய பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஒன்றான புறநகர் மின்சார ரெயில் சேவை இன்று காலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் அடுத்தடுத்து தாமதமாக இயக்கப்பட்டன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குறிப்பாக, தாம்பரம் வழியே சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோர் சரியான நேரத்திற்குத் தங்கள் இடங்களை அடைய முடியாமல் நிலையங்களிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

மின்சார ரெயில்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் மத்திய ரெயில் நிலையங்களை (சென்ட்ரல்) நோக்கி வந்தடைந்த முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சிக்னல் கோளாறு காரணமாக பாதையிலேயே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாகப் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே சென்னை நகருக்குள் வந்து சேர்ந்தன.

சிக்னல் கோளாறு குறித்த தகவல் கிடைத்ததும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். போக்குவரத்து சீராகும் வரை பயணிகள் பொறுமை காக்குமாறும், ரெயில்வே அறிவிப்புகளை கவனித்து தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோளாறுகள் விரைவில் சரி செய்யப்பட்டு ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com