செந்தில் பாலாஜி வழக்கு: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Senthil Balaji Case
Published on
Summary

அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வி.செந்தில் முருகன் புதிய சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

மிழக அரசு விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதில் உரிமை கோர அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்வதும் நியமிப்பதும் முற்றிலும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் முன்னேற்றம்

புதிய சிறப்பு வழக்கறிஞராக வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த பிரமாணப் பத்திரத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு தன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கு அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com