

லண்டன் கார் பந்தய திடலில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் நெகிழ்ச்சியுடன் சந்தித்த காட்சி இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த சந்திப்பை அஜித்குமார் ரசிகர்கள் கோவையில் “சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா” என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் மூலம் கொண்டாட, சமீபத்தில் அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய அரசியல் கட்சியுடன் இணைத்து பல்வேறு அரசியல் ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.
தமிழக முதலமைச்சர் விஜய், சமீபத்தில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கிவைத்தார்.
முன்னதாக கார் பந்தய திடலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய், அஜித்குமாரை சந்தித்து பேசினார். அப்போது இருநட்சத்திரங்களும் பரஸ்பரம் ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் உரையாடினர். இந்த நிகழ்வுகள் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களிலும் இந்த சந்திப்பு குறித்து பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்த சந்திப்பை கொண்டாடும் விதமாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்டா என்ற தலைப்பில் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த சுவரொட்டிகளை அஜித்குமார் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். கோவை மாவட்ட அஜித் தலைமை செயலகம் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
உளுந்தூர்பேட்டை அருகே நேற்று அஜித்குமார் ரசிகர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட அஜித்குமார் ரசிகர்கள், முதலமைச்சர் விஜய்யும், அஜித்தும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.