

சென்னையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
முதலில் மண்டலவாரியான பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், கடந்த ஒருவாரமாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அரசுத்தரப்பில் சந்திக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேசிய அமைச்சர்கள் கூறியதாவது;
பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தனர்.
மேலும் யாருக்கும் தொந்தரவுமின்றி போராடிய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இது ஒரு போராட்டம் இனறி மாநாடு போல் இருக்கிறது , ஆட்சி அமைத்து நூறு நாள் தான் ஆகிறது, அப்படியே யாரையும் விட்டுவிட மாட்டோம், எங்களுக்கு அவகாசம் வேண்டும் தெரிவித்தனர்.
மேலும் அடுத்த மாதம் முதல் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 தருவதாகவும், கடந்த காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
மேலும் மண்டலம் 4,7,8-ல் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து கால் , கை உறைகளும் வழங்கப்படும் என்றும், மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.