

சேலம்:
தமிழகத்தில் கெரோனா தொற்று பரவல் தடுப்புக்காக 2 ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
இதில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி கல்லூரிகளும், நவம்பர் 1-ந் தேதி பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன.
இதற்கிடையே கொரோனா தொற்று அதிகமாக பரவியதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் மீண்டும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 39 நாட்களுக்கு பிறகு சேலம் மாவட்டத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.
இதில் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 40 பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டன. 5 லட்சத்திற்கும் அதிகமாக மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
39 நாட்களுக்கு பின்னர் இந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாய் வகுப்பறையில் அமர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததை கொண்டாடும் விதமாக அவர்களை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.