

சென்னையில் மாதவரம் பகுதியில் நடமாடும் ஐஸ்கிரீம் வண்டியில் ரூ.700 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு உள்ளனர்.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் போலீசார் வாகன சோதனைகளை நடத்தி கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை அடிக்கடி பறிமுதல் செய்து வருகிறார்கள். மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரும், மத்திய புலனாய்வு பிரிவினரும் தனித்தனியாக சோதனைகளை மேற்கொண்டு பெரிய அளவில் கடத்தப்படும் போதைப் பொருட்களை மடக்கி பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மாதவரத்தில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மாதவரம் மேம்பால பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். நடமாடும் ஐஸ்கிரீம் வாகனத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்திற்கிடமான ஐஸ்கிரீம் வண்டிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போதுதான் மாதவரத்தில் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அருகில் ஐஸ்கிரீம் வண்டி ஒன்று நின்றுக் கொண்டிருந்தது.
அந்த வண்டியை ஓட்டி வந்தவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. இதைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் அப்துல் ஷூக்கூர் மற்றும் ஷபிக் அகமது என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் ஓட்டி வந்த ஐஸ்கிரீம் வண்டியை சோதனை செய்தனர். இதில் அந்த வண்டிக்குள் ஹெராயின் பாக்கெட்டுகள் வரிசைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹெராயின் போதைப்பொருளை பொறுத்தவரையில் அதன் மதிப்பு தரத்திற்கேற்ப ஒரு கிலோ ரூ.2 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை இருக்கும் என்றும் தற்போது பிடிப்பட்டுள்ள ஹெராயின் மதிப்பு ரூ.10 கோடி எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீம் பெட்டியில் இருந்து 70 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் சிக்கி உள்ளது.
இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.700 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கைதான 2 பேரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான இருவரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சென்னையை சேர்ந்த ஒருவரிடம் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. அவர் யார்? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று கைதான இருவரும் போதைப் பொருளை யாரிடம் இருந்து வாங்கி கடத்தி வந்தார்கள் என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வெளிமாநிலத்தில் இருந்து இந்த போதைப்பொருளை இருவரும் கடத்தி வந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என டி.ஜி.பி.மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அவர் அனுப்பியிருந்தார்.
எதாவது பகுதிகளில் போதைப் பொருட்களை மத்தியப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தால் அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரத்தில் சென்னை மாநகர போலீசாரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், மாதவரம் பகுதியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
உள்ளூர் போலீசார் இதனை கோட்டைவிட்ட நிலையில்தான் மத்திய புலனாய்வு அதிகாரிகள் போதைப் பொருட்களை பிடித்திருப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் போலீசார் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.