பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் - அமைச்சர் ராஜ்மோகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க. புகார்!

500 கோடி கொடுத்தாலும் பொருத்தமில்லாத ஒருத்தருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார்.
பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் - அமைச்சர் ராஜ்மோகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க. புகார்!
Published on: 

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்காக ஒருவர் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை வைத்து, அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பங்கேற்று பேசியபோது தனக்கும், முதலமைச்சருக்கும் இடையே உள்ள அனுபவங்களை சொல்கிறேன் என்று கூறி, இயல், இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று கூறி அதற்காக 5 கோடி ரூபாய் தருகிறேன் என்று கூறியவரை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாக மேடையிலேயே பேசியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.கழகத்தின் சார்பில் இன்று (02.11.2026) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் அவர்களிடம் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன் புகார் மனு அளித்துள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பேசியது என்ன?

தமிழ்நாடு நாள் நேற்று அரசால் கொண்டாடப்பட்டது. இந்த மேடையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்.,

“பெருமைமிகு இந்த மேடையில வச்சு மாண்புமிகு முதல்வரோடு எனக்கு வந்த சில அனுபவங்களைச் சொல்லப் போறேன். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை, ஊடக நண்பர்கள் வந்திருக்கீங்க. தம்பி லயோலா மணிக்கு மட்டும் தெரியும்.

இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்க, அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி ரூபாய் நான் தர்றேன்' அப்படின்னு ஒருத்தர் பேசினார்.

சிரிச்சுகிட்டே லயோலா மணிகிட்ட நான் சொல்லி அனுப்பினேன்: 'தம்பி, 500 கோடி கொடுத்தாலும் யாருக்கும் பொருத்தமில்லாத ஒருத்தருக்கு ஒரு பதவி கூட தளபதி தரமாட்டார்.

நான் தளபதியின் தம்பி; பொருத்தமுள்ள புஷ்பவனம் குப்புசாமி அண்ணனுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய் வாங்காம அந்தப் பதவியை தளபதி தரச் சொல்லியிருக்காரு'ன்னு சொல்லி அனுப்புனேன். இன்னைக்கு வரைக்கும் நான் வெளில சொன்னதில்லை அண்ணே.” எனக் கூறினார்.

X

/* CUSTOM CODE STARTS FROM HERE */ /* cast code */ /* Trend table with week rankings code */ /* Hero Image section code */