

மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் 34 இடங்களில் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றிய நிலையில், துரைமுருகனின் வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2023-ம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மணல் திருட்டு தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில் மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மணல் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் மற்றும் அவர்களது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
பொதுவாக ஒரு துறையில் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தால் அந்த துறை சார்ந்த முன்னாள் அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தப்படும்.
ஆனால் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நேற்று 34 இடங்களில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துரைமுருகன் வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை.
இதன் காரணமாக விரைவில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். கடந்த மாதம் 26-ந்தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இதுபோன்ற சூழலில் தான் தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன், பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.