

நடிகை ராதா தனது சகோதரி மீது அளித்த ரூ.46 கோடி காசோலை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை அம்பிகாவை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதா, தனது சகோதரியும், நடிகையுமான அம்பிகா மீது தனது கையெழுத்திட்ட காசோலைகளை திருடி ரூ.46 கோடியளவில் பண மோசடி செய்ய முயன்றதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை மறுத்த நடிகை அம்பிகா, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே ராதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி பிரிவுக்கு நடிகை ராதா நேற்று பிற்பகல் 3 மணியளவில் வந்தார். அங்கு விசாரணை அதிகாரி ஜரினா முன்னிலையில் ராதாவிடம் விசாரணை நடைபெற்றது.
இதில் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்த விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகை ராதா மாலை 6.10 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் நடிகை அம்பிகாவை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களின் ஆலோசனையையும் போலீசார் பெற்று வருகின்றனர்.