

பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா சகோதரிகள் இடையே சொத்து, பண விவகாரத்தில் கடும் மோதல் வெடித்துள்ளது. ராதா, அம்பிகா தனது காசோலைகளை திருடி ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக புகார் அளித்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்துகிறது. போரூர் ஏ.ஆர்.எஸ் கார்டன், தங்க நகைகள், ரூ.97 கோடி பாக்கி உள்ளிட்ட விவகாரங்களில் உண்மை வெளிவந்தால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும் என அம்பிகா எச்சரிக்கிறார்.
பிரபல நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். சொத்து மற்றும் பணப்பிரச்சனையால் இவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது. தனது காசோலைகளை திருடி அம்பிகா ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக ராதா அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அம்பிகா இன்று மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக உள்ளார்.
நடிகை அம்பிகா, ராதா மீது ஏற்கனவே கொடுத்த புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ளது. அதுதொடர்பாக, ராதாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அழைத்தனர். ஆனால் தனக்கு மூட்டு வலி இருப்பதாகவும் திங்கட்கிழமையன்று ஆஜர் ஆவதாகவும் ராதா கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை ராதா அளித்த ரூ.46 கோடி மோசடி முயற்சி புகார் தொடர்பாக நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களின் சந்திப்பின் போது நடிகை அம்பிகா கூறியதாவது:-
நடிகை ராதா தான் எனக்கு காசோலைகளை வழங்கினார். எனக்கு காசோலைகளை கொடுத்துவிட்டு வங்கியில் நிறுத்தியதும் ராதா தான்.
போரூர் ஏ.ஆர்.எஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பதில் தான் பிரச்சனை. போரூர் ஏ.ஆர்.எஸ் கார்டன் உருவாக நான் தான் முக்கிய காரணம். ஏ.ஆர்.எஸ் கார்டன் எனும் எனது சொத்தில் இருந்து எனது பெயரை நீக்கிவிட்டனர்.
என் பெயரில் உள்ள தங்க நகைகளையும் ராதா வைத்துள்ளார். என்னுடைய தங்கம் நிறைய என் சகோதரி ராதாவிடம் உள்ளது. தங்கம் என்றால் என் சகோதரி ராதாவுக்கு வீக்னெஸ் உண்டு.
கையெழுத்து போட்டுவிட்டு காசோலையை எனது வீட்டில் ஏன் ராதா வைக்க வேண்டும்?. எனது வீட்டில் உள்ள காசோலையை நான் எப்படி திருட முடியும்?
காசோலை கொடுத்தது ராதா, காசோலையை நிறுத்தியதும் ராதா, பணம் போனது எனக்கு. ராதா கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனதால் நஷ்டம் எனக்கு தான்.
நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும். ராதா மகள் திருமணத்தில் வேலைக்காரி போல் இருந்தேன். ராதா கையெழுத்திட்ட காசோலை என் வீட்டிற்கு எப்படி வந்தது?. சொத்துக்களை பிரித்த வகையில் ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார். ராதா தரப்பிடம் இருந்து எனக்கு ரூ.97 கோடி வர வேண்டும். ஏ.ஆர்.எஸ். கார்டன் பார்ட்னர்ஷிப் பங்கும் எனக்கு வரவேண்டும். ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்றார்.