

தனியார் பள்ளிகளுக்கு என்ஓசி சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகள் பெற்றுத்தருவதாக கூறி, நூறு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து நூறு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசகுமார் மனைவி தொடர்ந்த வழக்கில், அவர்மீதான குண்டர் நடவடிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக்கூடாது, தலைமறைவாகக் கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.