

தனியார் பள்ளிகளுக்கு என்ஓசி சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகள் பெற்றுத்தருவதாக கூறி, நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து நூறு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை காவல் ஆணையர், ஜூலை 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குபப்திவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை. குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு 13 நாட்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பி.டி.அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.