

ரூட் தல பிரச்சனையால், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பட்டாக் கத்திகளுடன் சுற்றித்திரிந்த 17 ஐடிஐ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை (செப்.29) சென்னை, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பட்டாக் கத்திகளை, நடைமேடையில் வைத்து தீட்டிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனைப் பார்த்து பயந்த, அங்கிருந்த பொதுமக்கள் இதுதொடர்பாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 17 மாணவர்கள் பிடிபட்ட நிலையில், மூன்று பேர் தப்பிச் சென்றனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் இவர்கள் அனைவரும் அம்பத்தூர், அரக்கோணம், திருவள்ளூர், ஐடிஐ தொழிற்கல்வி மாணவர்கள் என்று தெரியவந்தது.
மேலும் இவர்களுக்கும் சென்னை தங்க சாலையில் உள்ள ஐடிஐ மாணவர்களுக்கும் ரூட் தல பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததும், தங்க சாலை மாணவர்கள் மாலை 5 மணி அளவில் இந்த வழியாகத்தான் திருவள்ளூர் செல்லும் ரயிலில் செல்லும் போது அவர்களை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் நோக்கத்துடன் பட்டாக்கத்திகளுடன் தயார் நிலையில் இருந்ததும் தெரிய வந்தது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் 14 பேர் மாணவர்கள் என்பதால் அவர்களை கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்தீருத்த பள்ளியிலும், மூன்று மாணவர்களை புழல் சிறையிலும் அடைத்தனர்.
மேலும் அவர்கள் இதுபோன்று ஒன்று கூடுவதற்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவர்க்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டு ஒன்று சேர்ந்ததும் தெரியவந்தது. பொதுமக்களின் தகவலால் ரயில் நிலையத்தில் நடைபெற இருந்த கல்லூரி மாணவர்கள் கொலை தடுக்கப்பட்டது.
இவர்களிடமிருந்து மூன்று பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.