

ஒருபுறம் வறட்சி மற்றும் சுட்டெரிக்கும் வெயிலால் மலைத் தோட்ட காய்கறி பயிர்கள் கருகி வரும் நிலையில், மறுபுறம் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் எல்நினோவின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், இதில் முக்கியமாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக நீலகிரி மாவட்டம் தற்போது கடுமையான வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் செய்வதற்கான நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் தொடர்ந்து கவலை அடைந்து வருகின்றனர்.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக கேரட், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பயிர்கள் விளைந்து பலன் கொடுக்கும் நிலையில் கருகி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகளின் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பீட்ரூட் ரூ.45-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் ஒரு கிலோ கேரட் ரூ.60 இருந்து தற்போது ரூ.90 ஆக விலை அதிகரித்துள்ளது. நீலகிரி பூண்டும் விலை உயர்வுடன் காணப்படுகிறது. ஒரு கிலோ பூண்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒருபுறம் வறட்சி மற்றும் சுட்டெரிக்கும் வெயிலால் மலைத் தோட்ட காய்கறி பயிர்கள் கருகி வரும் நிலையில், மறுபுறம் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.