

விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், "அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது.
அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 6 மாதங்களில் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த அரசு அமைந்ததில் இருந்து அத்தியவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய், இன்றைக்கு 75 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய், இன்று கிலோ 80 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150, இன்றைக்கு ரூ.180, மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.40, இன்று ரூ.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மக்கள் இதனால் மிகவும் பாதித்திருக்கிறார்கள். மளிகை கடை பக்கம் செல்வதையே குறைத்து வருகிறார்கள் என செய்தி வருகிறது.
ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதை கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது.
அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாடு மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோக திட்டத்தை அறிவித்தார்.
அதன் மூலம் பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கினார். கடுகு, சீரகம் , வெந்தையம் உள்ளிட்ட 10 மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள். கலைஞர் தொடங்கி வைத்த திட்டம் தற்போதுவரை நடந்து வருகிறது.
தற்போது வழங்கும் அளவை விட கூடுதலாக வழங்க வேண்டும் என இந்த அரசு ஆவன செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு அமைச்சர்கள், அதன் துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.
அதிமுக தலைவர் இபிஎஸ் பேசுகையில், "அரசி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை கிலோ ரூ.48 இல் இருந்து ரூ.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு கிலோ ரூ.200 இல் ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் ரூ.200 இல் இருந்து தற்போது ரூ.300க்கு விற்கிறது.
வெள்ளம் ரூ.58 இல் இருந்து தற்போது ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. புளி, பருப்பு விலைகளும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நமக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக அரசு இருந்தபோது விலை ஏற்றத்தின்போது எந்த பொருள் விலை ஏறுகிறதோ, அந்த பொருள் எந்த மாநிலத்தில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கிருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து விற்கப்பட்டது.
அதனால் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். எனவே இந்த அரசும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், " ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நமது மாநிலத்தில் மட்டுமல்ல, அதிக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவிலும் ரூபாய் ஏறியுள்ளது. எல்லா இடங்களிலும் விலை ஏறத்தான் செய்திருக்கிறது.
நமது முதலமைச்சர் தலைமையிலான கமிட்டியில் வாராவாரம் 41 பொருட்களுக்கு உண்டான விலையை தினமும் கண்கணிக்கிறோம். வெங்காயம், உருளைக்கிழங்கு, அரசி என எல்லா பொருட்களையும் கண்காணிக்கிறோம்.
விலை உயர்வு அதிக உள்ளவற்றை கண்டறிந்து கடந்த காலங்களில் என்ன நடைமுறைப்படுத்தினோமோ அதை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு பாதிப்பில்லாத வண்ணம் விலையை குறைக்க முயன்று வருகிறோம்.
ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமல்ல, அங்கன்வாடி பசுமை கடைகள் மூலமாகவும் சென்ற ஆட்சிக்காலங்களை போல இப்போதும் கண்டிப்பாக செய்யப்படும்" என தெரிவித்தார்.