

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் 72 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். நீதித்துறையில் சர்ச்சைகளை எதிர்கொண்ட இவர், 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சென்னை, கொல்கத்தா ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர்.
நீதிபதியாக இருந்தபோது, நீதித்துறையில் பாகுபாடு, ஊழல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார் கர்ணன். சக நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் கூறியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2017-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தால் இவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதித்துறையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கர்நாதம் கிராமத்தில் 1955-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் பிறந்தார். சென்னை புதுக்கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் (பி.எல்) படிப்பையும் முடித்து 1983-இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.