நான் மட்டும் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்- ஆர்.பி. உதயகுமார்

அ.தி.மு.க.வில் ராஜாபோல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆர்பி உதயகுமார்
ஆர்பி உதயகுமார்
Published on

தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம்.

தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு

தமிழகத்தில் இன்னும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு மேகதாது அணை, காவிரி பிரச்சனை, முல்லைப்பெரியாறு குறித்து ஏதாவது தெரியுமா? இதுபோன்றவர்களைத்தான் தமிழக மக்கள், இளைஞர்கள் தேர்வு செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்தை காரணம் காட்டி வருசநாடு மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சருக்கு ஏதாவது தெரியுமா? தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருக்காவது தெரியுமா? தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்து இங்குள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துகிறது.

வேதனை

2029-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அப்போது இந்த ஆட்சி நிச்சயம் இருக்காது. தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம். எதிர்கட்சியின் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் தற்போதயை அரசுக்கு அது புரியவில்லை. 75 சதவீத மக்கள் ஏன் இந்த அரசுக்கு வாக்களித்தோம் என்ற வேதனையில் உள்ளனர்.

அ.தி.மு.க.வில் ராஜாபோல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இயங்கி வருகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com