கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு: மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்க!- ராமதாஸ்

கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.
ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், சிமெண்ட், இரும்புக் கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கட்டுமானப் பொருட்களின் விலை 40% முதல் 100% வரை உயர்ந்துள்ளதால், ஒரு சாதாரண வீடு கட்டுவதற்கான செலவு பல லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் கட்டுமானத் துறையை நம்பி இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். கட்டுமானப் பணிகள் குறையும் சூழல் உருவானால், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, உற்பத்திச் செலவுகள் உயர்வு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், செயற்கைப் பற்றாக்குறை, பதுக்கல் மற்றும் சந்தை முறைகேடுகள் உள்ளனவா என்பதையும் தமிழக அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.

கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் சொந்த வீட்டுக் கனவு சிதையக் கூடாது; இலட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது; மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறை முடங்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com