

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நண்டு ஓடை பாசன வாய்க்காலை தூர்வாரி, விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புவனகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
புவனகிரி அருகே உள்ள சொக்கன்கொல்லை, குண்டியமல்லூர், கொத்தவாச்சேரி ஆகிய கிராமங்களில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், தொடர் மழை காரணமாக வடிகால், நண்டு ஓடை பாசன வாய்க்கால் உடைந்துள்ளது.
இதனால் வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் சம்பா பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தேங்கியுள்ளது. தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, உடைந்த வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிக பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து புவனகிரி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நண்டு ஓடை பாசன வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஆகாயத்தாமரைகள், செடி, கொடிகள் படர்ந்து தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக சம்பா பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதே பிரச்சினை நீடித்து வருவதாகவும், பொதுப்பணித்துறையின் அலட்சியமே தற்போதைய பாதிப்புக்கு காரணம் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நண்டு ஓடை பாசன வாய்க்காலை தூர்வாரி, விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.