

தமிழகத்தில் 2-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் சூறாவளிக்காற்று காரணமாக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (அர்னாப்) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 17.30 மணி அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 23.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (27-10-26) காலை 08.30 மணி அளவில் மிக தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (28-10-26) ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.
சுமார் 3.1 கிமீ உயரம் வரை இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலிருந்து, 'அர்னாப்' (Arnab) மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29 மற்றும் 30-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
1 மற்றும் 2-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.