ஜன.14-க்கான டிக்கெட் காலி: நாளை ஜன.15-க்கு புக்கிங் ஓபன்- IRCTC-யில் கடும் போட்டி

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய விரைவு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றத்தீர்ந்தன.
 Indian railways
Published on: 
Summary

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியான நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 15) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காகச் சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் அதிகாலை முதலே பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்தனர்.

நொடியில் காலியான டிக்கெட்டுகள்

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய விரைவு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் தொடங்கியது. இணையதளத்திலும் அதிகப்படியான பயனர்கள் ஒரே நேரத்தில் அணுகியதால் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்ததாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை முன்பதிவு

இதனிடையே, தைப்பொங்கல் திருநாளான ஜனவரி 15-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (நவம்பர் 16) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X