

பள்ளியின் தலைமையாசிரியர் கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டாலும் அது முறையாக குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் அமோக வரவேற்பு பெற்றது.
பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. பொங்கல், கிச்சடி, உப்புமா போன்ற சத்துள்ள உணவு வகைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் சிலர் முறைகேடு செய்வது தெரியவந்து உள்ளது.
புளியந்தோப்பு 72-வது வார்டு ஹார்னஸ் சாடல் பாக்டரி ரோடு உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 250 மாணவர்கள் படித்து வருகிறார்கள். 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 150 குழந்தைகள் காலை உணவு திட்டத்திற்கு தகுதியானவர்கள். ஆனால் 60 பேர் மட்டுமே காலை உணவு சாப்பிடுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சுடச்சுட சுவையான பொங்கல் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டது. 8.30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 4 குழந்தைகள் மட்டுமே பொங்கல் வாங்கி சாப்பிட்டார்கள். வேறு யாரும் சாப்பிடவில்லை. 9 மணிக்கு வகுப்பு தொடங்கியது. 9.05 மணிக்கு மீதமுள்ள மொத்த பொங்கலையும் ஒரு கூடையில் வைத்து ஒரு பெண் வெளியே கொண்டு சென்றார்.
அந்தப் பெண் ஒரு ஓட்டலுக்கு வினியோகம் செய்வதற்காக பொங்கலை கொண்டு செல்வது தெரியவந்தது. ஓட்டலுக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை பள்ளியில் உள்ள சிலர் பங்கிட்டு கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காலை உணவை ஒவ்வொரு நாளும் ஓட்டலில் விற்று முறைகேடு செய்வது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பள்ளி குழந்தைகளின் பசி தீர்க்க வேண்டிய உணவு ஓட்டல்களில் விற்கப்பட்டு வியாபாரமாகி கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் தினமும் பார்த்து வேதனை அடைந்தனர். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு பள்ளியில் இருந்து காலை உணவை அந்தப் பெண் ஓட்டலுக்கு கொண்டு செல்வதை கண்காணித்து உள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். காலை உணவை கொண்டு செல்லும் அந்தப் பெண் யார்? அவருக்கும் பள்ளிக்கும் என்ன தொடர்பு? குழந்தைகளுக்கு உணவை வழங்கிய ஒரு ஆசிரியர் மீதமுள்ள உணவை எந்த ஓட்டலுக்கு அனுப்பி வைக்கிறார், என்பது கேள்விக்குறியாக முன்வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 50 பேர் சாப்பிடக்கூடிய உணவு வெளியே விற்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேருக்கு உணவு தினமும் வழங்கப்படுகிறது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தரமான காலை உணவு வெளியே விற்கப்பட்டு பணமாக்கப்படுகிறது. சரியான புள்ளி விவரங்கள் இல்லாமல் உணவு வினியோகிக்கப்படுவதால் இந்த முறைகேடு நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தால் இது போன்ற தவறு நடைபெறாது.
பள்ளியின் தலைமையாசிரியர் கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டாலும் அது முறையாக குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுபோன்று எத்தனை பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலை உணவு ஓட்டல்களுக்கு செல்கிறது, மாணவர்கள் வருகை பதிவு, சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகாரிகளுக்கு தெரிவித்து உணவை அதிகளவு பெற்று முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காலை உணவு திட்டத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பெண் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.