போக்சோ வழக்கு - ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கு - ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Published on: 

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், 84 வயதான தொழிலதிபர் வீரமணி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணி, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது முந்தைய காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் அதனை மேலும் நீட்டித்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள அவரது பெண் உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று இவரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக்குழு

இந்த வழக்கில் சுதந்திரமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஐஜி தலைமையில் உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கடந்த ஆண்டு இந்த வழக்குப்பதியப்பட்டபோது, சென்னையில் முக்கிய காவல் பொறுப்புகளில் இருந்த அருண் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ், யாஷ்மின் ஆகியோர் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com