

அருண் ஐபிஎஸ் மற்றும் கோவை காவல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் ஆகிய இருவரையும் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண், சட்டமன்ற தேர்தல் காலத்தின்போது, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
பின்னர், தவெக ஆட்சியமைத்தபின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த நியமனம் தவெக அரசுக்கு பல விமர்சனங்களை ஏற்படுத்த, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே புகாரளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸின் ரஞ்சன் குமார் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் தங்களுக்கு பென் டிரைவ் ஆதாரம் மூலம் இந்த விஷயம் தெரியவந்துள்ளது என்று காவல்துறை கூறுவது தவறானது. இந்தச் சம்பவம் குறித்து 2024 நவம்பர் 22 அன்று சென்னை காவல்துறைக்குத் தான் ஆதாரங்களுடன் புகார் அளித்ததாக ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார்.
2024 நவம்பர் 22 அன்று அப்போதைய சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் என். கண்ணனை நேரில் சந்தித்து, வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி ஆகியோருக்கு எதிராக விரிவான எழுத்துபூர்வ புகார் மனுவை சமர்ப்பித்ததாகக் கூறியிருந்தார்.
14 முதல் 15 வயதுடைய சிறுமிகளைத் தனது படுக்கையறைக்கு வரவழைத்து, சாக்லெட் மற்றும் தின்பண்டம் கொடுத்து வீரமணி பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆதாரங்கள் மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களைத் தான் காவல்துறையிடம் வழங்கியதாக ரஞ்சன் குமார் குறிப்பிட்டுள்ளார்.
தான் புகார் அளித்த பிறகு சமூக ஒழுங்கீன தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த வீடியோக்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், அப்போதே வழக்குப் பதிவு செய்து வீரமணி மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ரஞ்சன் குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த அருண்மீதும், கண்ணன் ஐபிஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.