

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முகநூல் வழியாக தனது கட்சி தொண்டர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஆதரிக்கும் மதுராந்தகம் கட்சி வேட்பாளர் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் நம் வளர்ச்சியை விரும்பாத சில சக்திகள் சமூக ஊடகங்களில் வதந்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.
பா.ஜ.க, பா.ம.க. இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தை ஒருபோதும் இடம் பெறாது என 15 ஆண்டு களுக்கு மேலாக நாம் சொல்லி வருகிறோம். அந்த நிலைப்பாட்டை வாய்ப்பாக கருதி த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுகிறது என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள்.
அதனால் அவர்கள் அ.தி.மு.க.விற்கு வழங்க வேண்டிய ஆதரவை கூட வழங்காமல் நடுநிலை வகிப்பதாக கூறி இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் த.வெ.க.-விற்கு ஆதரவு தர இருக்கிறார்கள்.
அதன்மூலம் இடைத் தேர்தல் முடிந்தவுடன் பா.ம.க, த.வெ.க.வுடன் கைகோர்க்கும். அமைச்சரவையில் இடம்பெறும், துணை முதலமைச்சர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் என்றெல்லாம் செய்திகளை பரப்புகிறார்கள்.
அவர்களுடைய நோக்கம் என்னவென்றால் பா.ம.க. த.வெ.க. கூட்டணியில் இடம்பெறும் என்ற செய்தி பரப்பப்பட்டால் விடுதலை சிறுத்தை பின்வாங்குவார்கள், தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
த.வெ.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள். இதன் மூலம் த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தை ஆதரவு முழுமையாக போய் சேராமல் தடுக்க வேண்டும்.
குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் விடுதலை சிறுத்தைகளின் வாக்குகளை த.வெ.க.விற்கு முழுமையாக பரிமாற்றம் செய்யவிடாமல் தடுத்துவிட முடியும் என்று கணக்கு போட்டு இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.
விடுதலை சிறுத்தை தோழர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு முன்பே இது போன்ற வதந்தி உருவானது. த.வெ.க, பா.ம.க.வோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால் த.வெ.க. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறுவதில் தான் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்போதும் இப்படி ஒரு செய்தி பரவியது. அப்போதும் இவர்களின் நோக்கம் விடுதலை சிறுத்தையை, த.வெ.க.வோடு இணைய விடாமல் தடுப்பது, தி.மு.க.-விலும் தொடர விடாமல் தடுப்பது, எந்த அணியிலும் இடம்பெற விடாமல் தடுத்து தனிமைப்படுத்துவது என்கிற நோக்கத்தோடு தான் அத்தகைய வதந்தியை திட்டமிட்டு பரப்பினார்கள்.
த.வெ.க-பா.ம.க.வுக்கு இடையே உள்ள உறவு எத்தகையது என்பது நமக்கு தெரியாதா? அதைப்பற்றி நாம் ஒருபோதும் சிந்தித்ததில்லை. அதுகுறித்து நாம் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. ஏனென்றால் நாம் ஏற்கனவே ஒரு முடிவினை எடுத்து இருக்கிறோம். அதை நடை முறைப்படுத்தி வருகிறோம்.
அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் இருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரியும். அனைவரும் அறிந்த அரசியல் உண்மை. பொருட்படுத்த வேண்டாம். ஆகவே நமக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை.
இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். எனவே இது போன்ற வதந்திகளை எப்போது வந்தாலும், எந்த சூழ்நிலையில் வந்தாலும், எந்த மூலையில் இருந்து வந்தாலும் அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை. மிக கவனத்தோடு மிகுந்த எச்சரிக்கையோடும் அரசியல் களத்தில் நாம் காய்களை நகர்த்த வேண்டி இருக்கிறது.
இன்று மாலை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும். அதேபோல 3-ந் தேதி அல்லது 4-ந்தேதி தாராபுரத்தில் களப்பணியா ளர்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.