கோவையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

மழை குறைவு காரணமாக சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர்.
கோவையில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி  சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
Published on: 
Summary

ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரி, வண்ண மலர்கள், பசுமையான மலைத்தொடர்கள், இதமான காலநிலை என அனைத்தையும் ரசித்து சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் வால்பாறைக்கு வந்தனர். அவர்கள் சக்தி-தலநார் செல்லும் சாலையில் உள்ள காட்சி முனை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு ரசித்தனர்.

கவியருவி

மழை குறைவு காரணமாக சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வால்பாறைக்கு செல்ல நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

ஆனைமலை அருகே உள்ள ஆழியார் கவியருவியில் காலையிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை புரிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக தங்கள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அருவியில் இருந்து கீழே வரும் தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்தும், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் சென்றனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி ஏரி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஊட்டிக்கு வருகை தந்தனர்.

படகு இல்லம்

ஊட்டி ஏரி படகு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. ஏரியின் அழகை ரசித்தபடி படகு சவாரி மேற்கொள்வதில் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். குறிப்பாக மிதிப்படகு, மோட்டார் படகு உள்ளிட்ட படகுகளில் பயணம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் படகுகளில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், ஏரியை சுற்றியுள்ள பசுமையான மலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்து மகிழ்ந்தனர்.

தாவரவியல் பூங்கா

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பசுமையான புல்வெளிகள், பல்வேறு வகையான மலர்ச்செடிகள், அழகிய மலர்ப்பாத்திகள் மற்றும் உயர்ந்து நிற்கும் பழமையான மரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

ஊட்டியில் அரசு ரோஜா பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள், அழகிய மலர்த்தோட்டங்கள் மற்றும் படிக்கட்டு வடிவில் அமைந்துள்ள பூங்காவின் தோற்றம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காணப்பட்ட ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

போக்குவரத்து அதிகரிப்பு

தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால், ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-கோத்தகிரி மற்றும் ஊட்டி–-கூடலூர் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்தது. சுற்றுலா வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் வருகை அதிகரித்ததால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக ஊட்டி நகரில் உள்ள உணவகங்கள், தேநீர்க் கடைகள், சாக்லேட் விற்பனை நிலையங்கள், நினைவு பொருள் கடைகள் மற்றும் சுற்றுலா சார்ந்த வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் அதிகரித்தது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவது சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

களைகட்டிய ஊட்டி

ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரி, வண்ண மலர்கள், பசுமையான மலைத்தொடர்கள், இதமான காலநிலை என அனைத்தையும் ரசித்து சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com