

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரபல சமையல் கலைஞர் செப் தாமு இன்று மரணம் அடைந்தார். உடல்நலக் குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தது சமையல் கலைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அடையாளமாகவும், உலகளவில் அறியப்பட்ட முன்னணி சமையல் கலைஞருமான செஃப் தாமு என்று அன்போடு அழைக்கப்படும் கே.தாமோதரன் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பிரபல சமையற் கலைஞர் “பத்மஸ்ரீ” செப் தாமு (எ) தாமோதரன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். செப் தாமு இந்தியாவின் சிறந்த சமையற்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர். சமையலில் கின்னஸ் சாதனை புரிந்தவர். புரட்சித் தலைவி அம்மா மீதான பெரும் பற்றால் 2013-ம் ஆண்டில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர். எப்போதும் இன்முகத்துடன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தோன்றி மகிழ்வித்த அவரை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
செப் தாமு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமையல் துறை மற்றும் சின்னத்திரையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.