SIR-ன் விளைவுகள் பற்றி இந்தியா முழுவதும் அலாரம் அடித்து சொன்னவர் மு.க.ஸ்டாலின் - பரந்தாமன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து அன்று பீகாரில் பேரணி நடந்தது.
பரந்தாமன்
Published on: 
Summary

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி இந்தியா முழுவதும் அலாரம் அடித்து சொன்னவர் மு.க.ஸ்டாலின். பொதுமக்களிடமும் இதை தி.மு.க.வே கொண்டு சேர்த்தது என்று பரந்தாமன் கூறினார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., வி.சி.க., நாம் தமிழர் உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பகுஜன் சமாஜ் தவிர 12 கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டன.

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூட்டத்திற்கு வந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று த.வெ.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வலியுறுத்தின. ஞானேஷ்குமார் பதவி விலகாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டால் சரியாக அமையாது என்றனர்.

இதை தொடர்ந்து 9 கட்சிகளும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றன.

அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்போது 74 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் சேர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையில் உள்ள பல குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தினோம். குளறுபடிகளை எப்படி சரி செய்யப்போகிறீர்கள் என்றும் கேட்டோம்.

ஆனால் இனி செய்யப்பட உள்ள சிறப்பு திருத்தமும் நேர்மையாக நடக்காது. தலைமை தேர்தல் ஆணையர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க.வின் கருத்துக்களை தெரிவித்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளோம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து அன்று பீகாரில் பேரணி நடந்தது. அதில் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி இந்தியா முழுவதும் அலாரம் அடித்து சொன்னவர் மு.க.ஸ்டாலின். பொதுமக்களிடமும் இதை தி.மு.க.வே கொண்டு சேர்த்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com