

பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்காக தரமான வாழைப்பழங்களை விநியோகிக்க ரூ.1 கோடி முன்வைப்புத் தொகையுடன் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் 2027 ஜூன் 30 வரை வாழைப்பழங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே வழங்க வேண்டும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக, கற்பூரவள்ளி , குடகு வாழைப்பழம் மற்றும் மலைவாழைப்பழங்களை விநியோகம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒப்பந்தத்தின் கீழ், 2027 ஜூன் 30-ஆம் தேதி வரை பஞ்சாமிர்தம் தயாரிப்புப் பிரிவுக்குத் தேவையான வாழைப்பழங்களை விநியோகம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டெண்டர் முன்வைப்புத் தொகையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 26-ஆம் தேதி காலை 10 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளிகள் அதே நாளில் காலை 11 மணிக்குத் திறக்கப்படும். இதற்கு முன்னதாக நவம்பர் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு முன் ஒப்பந்தப்புள்ளிக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் தரமான வாழைப்பழங்களை வழங்க வேண்டும் என்பதுடன், விநியோகக் காலம் முழுவதும் ஒப்புக்கொண்ட விலையிலேயே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.