திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் கேட்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தொடர் புகார்கள் வந்தன.
திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சசிலேகா உள்ளிட்ட 12 பேர் கொண்ட அதிரடிப் படையினர் நேற்று மாலை 4 மணியளவில் அவிநாசி நகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென புகுந்தனர்.
உடனடியாக நகராட்சி அலுவலகத்தின் இரு பிரதான நுழைவு வாயில் கதவுகளும் பூட்டப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்லாமலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வராமலும் பலத்த பாதுகாப்புடன் சோதனை தொடங்கப்பட்டது.
தற்போது அவிநாசி நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் நியமிக்கப்படாததால், திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையர் பாலமுருகன் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார்.
சோதனை நடைபெற்ற போது, அலுவலகத்தில் நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர், எழுத்தர் மற்றும் பொறியாளர்கள் பணியில் இருந்தனர். மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை, சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது.
சோதனையின் போது அதிகாரிகளின் செல்போன்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கூகுள் பே உள்ளிட்ட யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இதில், கணக்கில் வராத ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.6,53,767 பெறப்பட்டிருந்தது அம்பலமானது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் என்பவரது கணக்கில் ரூ.5,53,767-மும், நகராட்சி மேலாளர் செல்வகுமார் என்பவரது கணக்கில் ரூ.1 லட்சமும் ஆன்லைன் மூலமாக லஞ்சமாகப் பெறப்பட்டிருப்பது உறுதியானது.
இந்தப் பணப் பரிவர்த்தனைக்கான சரியான ஆவணங்களையோ, முறையான விளக்கத்தையோ அதிகாரிகளால் தெரிவிக்க முடியவில்லை.
இதையடுத்து, லஞ்சப் பணம் பெற்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மேலாளர் செல்வகுமார் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 11 முக்கியமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் பூட்டு போட்டு, 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையும், டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கி அதிகாரிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.