

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட கலெக்டர் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அருள் விக்னேஷ்(வயது34).
இவர் அந்த மாவட்டத்தின் பெண் கலெக்டருக்கு மதுபோதையில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர், பெண் கலெக்டருக்கு இதுபோன்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
த.வெ.க. எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து, இந்த விவகாரம் குறித்து விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் அனுப்பியது.
மேலும் இதுதொடர்பாக அ.தி.மு.கவை சேர்ந்த வக்கீல் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துக்களை கேட்டு இன்று விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, மாவட்ட கலெக்டரிடம் இருந்து இதுதொடர்பாக புகார் வரவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டர் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து கலெக்டர் புகார் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த புகாரில் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாக மாவட்ட கலெக்டர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலெக்டரின் புகாரை அடுத்து, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, இவ்வழக்கில் யாரையும் காப்பாற்றும் வகையில் அரசு செயல்படாது என நம்புகிறேன் என நீதிபதி கூற, அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அருள் விக்னேஷிடம் உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் யோகேஸ்வரன் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். விசாரணைக்கு பின் காவல்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக, எம்.எல்.ஏ. மீது கலெக்டர் புகார் அளித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ. மீது கலெக்டர் அளித்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.