

கோவை பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்தது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. த.வெ.க. ஆட்சியில் புத்தகங்கள் வாங்கப்படவில்லை என நூலகத்துறை விளக்கம் அளித்துள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து அரசியல் தலைவர்கள் மோதல் வெடித்துள்ளது.
கோவை பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது எழுத்தாளர்களையும், வாசகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதில் எழுத்தாளர் யார் என்றே தெரியாமல் பல போலியான புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சியாளர்களான தி.மு.க. தரப்பினருக்கும், தற்போதைய ஆட்சியாளர்களான த.வெ.க. தரப்பினருக்கும் மோதல் வெடித்துள்ளது. புத்தகங்கள் உங்கள் ஆட்சியில் தான் வாங்கப்பட்டுள்ளது என ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு பெரியார் நூலகத்துக்கு புதிதாக புத்தகங்கள் எதுவும் வாங்கப்படவில்லை என நூலகத்துறை விளக்கம் அளித்துள்ளது.
த.வெ.க.வின் ஐடி பிரிவு, பிப்ரவரி 2026-ல் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து புத்தகங்களை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையின் நகலைப் பகிர்ந்த பிறகு இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக அவர்கள் முந்தைய தி.மு.க. அரசைக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொது நூலகத்துறை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) எஸ். ஜெயந்தி கூறுகையில், "தேர்வுக் குழு மற்றும் பரிந்துரைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே புத்தகங்கள் வாங்கப்பட்டன. தேர்வுக் குழுவில் முன்னாள் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன், விலங்கியல் பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில், அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், தமிழ் அறிஞர் எம்.கே. அரவிந்தன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் கே. ராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்" என்றார். நவீன இலக்கியம் மற்றும் இலக்கிய விமர்சனத்தை பரிந்துரைக்கும் குழு உறுப்பினர்களில் ஒருவராக பெருமாள் முருகன் இருந்தார். எவ்வாறாயினும், பரிந்துரைக்கப்பட்ட நூல்களில் எவை வாங்கப்பட்டன என்பது தமக்குத் தெரியாது என்று அவர் கூறி உள்ளார்.
நூலகத்துக்கு வாங்கப்பட்ட புத்தகங்களில் பல்வேறு சர்ச்சையான தகவல்கள் இடம்பெற்று உள்ளன. தனலட்சுமி அர்ஜுன் எழுதிய ‘தமிழ்நாடு ஒரு பார்வை’ என்ற புத்தகத்தில், 1947-ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர் உண்மையில் அப்போது அத்தகைய தலைவராகவே இல்லை என்று முத்துவேலு சுப்பையா ஐயர் தெரிவித்துள்ளார். அதேபோல், மணிஷா சரவணன் எழுதிய ‘பாரதியார் கதைகள்’ என்ற புத்தகத்தில் சரிபார்க்கப்படாத ஒரு கதையைப் புலவர் சுப்பிரமணிய பாரதியாருக்கு உரியதாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில், திரிஷா விஜய், விஜய் பாலு, சூர்யா பாலு, மோனிகா சூர்யா போன்ற பரிச்சயமற்ற ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும், நூலகங்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சென்னையில் உள்ள அகல் விளக்கு பதிப்பகத்தின் அதே முகவரியில் செயல்பட்ட பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து வந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா பாலு என்பவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் 300 பக்கப் புத்தகம், ஒப்பீட்டளவில் பிற வெளியீடுகளின் விலை ரூ.350 ஆக இருக்கும்போது, ரூ.1,445 என்ற அதிக விலையில் வாங்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. விசாரணையின் முடிவில் முறைகேடுகள் முழுவதும் வெளிச்சத்துக்கு வரும் என தெரிகிறது.