

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்படாமல், வழக்கமான உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டதால் பரபரப்பும், போராட்டமும் ஏற்பட்டுள்ளது.
தவெக அரசின் இந்த நிலைப்பாட்டை பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது என பதிவிட்டு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரை பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
“உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறியது குறித்து சட்ட அமைச்சர் ஒருவர் பெருமையுடன் பதிவிடுவது ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புகிறது: இத்தகைய பதிவின் மூலம் நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல வருகிறீர்கள்?
சட்ட அமைச்சர் பதவியில் இருப்பவர், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை வெளிப்படையாக எதிர்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர், அந்தப் பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.
இந்துக்களின் உணர்வுகளைப் புறக்கணித்ததற்கும், சட்டத்தின் ஆட்சியை மதிக்கத் தவறியதற்கும் இந்த அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு இதற்கான பதில் கிடைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தத் தவறியது நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதற்குச் சமம் என்பதால், நிர்மல் குமாரை சட்ட அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.