முட்டைக்கோஸ் அறுவடை பணி தீவிரம்- விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

முட்டைக்கோஸ்கள் உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ்
Published on: 

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்த படியாக மலைக்காய்கறிகள் சாகுபடி முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது.

குறிப்பாக, நீர் ஆதாரம் உள்ள விளைநிலங்களில் முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

அறுவடை பணி

தற்போது ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள பச்சை மற்றும் சிவப்பு முட்டைக் கோஸ்களை வெட்டி, விற்பனைக்காக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் விவசாயிகளும், தொழிலாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடுங்குளிரும் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், நல்ல விலை கிடைக்கும்போதே விளைபொருட்களை விற்பனை செய்யவும் விவசாயிகள் அறுவடை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முட்டைக்கோஸ்

நீலகிரியில் விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ்கள் உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் முட்டைக்கோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரையிலும், உள்ளூர் சந்தைகளில் ரூ.25 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

நாற்றுகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாய தொழிலாளர்களுக்கான கூலி மற்றும் போக்குவரத்துச் செலவு என முட்டைக்கோஸ் சாகுபடிக்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. தற்போது முட்டைக்கோஸுக்கு ஓரளவு நல்ல விலை கிடைத்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைக்காய்கறிகளுக்கு ஆண்டு முழுவதும் நிலையான, கட்டுப்படியான விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீலகிரி மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X