

அரசின் முறையான கோரிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மயிலாப்பூரில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை ஒரு பொதுத்துறைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி அளித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. பாரம்பரியமிக்க இந்த தலைமை செயலகத்தில் சட்டமன்ற கட்டிடமும் இயங்கி வருகிறது.
தலைமை செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் வாகன நெரிசலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், ஊழியர்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.
தலைமை செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் எண்ணிக்கையும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் சட்டசபையில் அவர் சமீபத்தில் அறிவித்தார். அதன் அடிப்படையில் அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் பிரம்மாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரதான கட்டிடம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிகளாக கட்டப்பட உள்ளது. சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தின் இன்றைய வழிகாட்டு மதிப்பு ஒரு சதுர அடி ரூ.22,000 ஆகும். நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.2047 கோடியாக உள்ளது. புதிய தலைமை செயலகம்-சட்டமன்ற வளாகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பது சிறப்பாகும்.
அரசின் முறையான கோரிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மயிலாப்பூரில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை ஒரு பொதுத்துறைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலப்பகுதி 1958-ல் வீட்டு வசதி திட்டங்களுக்கு கையகப்படுத்தப்பட்டன. 1963 முதல் 1968-ம் ஆண்டு இடையான 1112 அரசு ஊழியர் குடியிருப்புகளும் 96 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன.
1986-ல் மேலும் 60 குடியிருப்புகளும் 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1380 ஆனது. இவற்றில் 1284 குடியிருப்புகள் சிதலமடைந்ததால் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் இருந்து அந்த இடம் காலியாக உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தனது சொந்த 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிலத்தை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.
இதே போல தலைமை செயலகம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 இடத்தை வழங்கவும் கமிஷனர் சமீரன் ஒப்புதல் வழங்கி உள்ளார். நிலம், சாலை அமைப்பதற்கும் சில பயன்பாடுகளுக்கும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள கூடுதல் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.