

முத்தமிழ் நகரில் ரூ.4.73 கோடி செலவில் புதிதாக மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைக்கப்படுகிறது. 78 காய்கறி கடைகள், 24 மீன் இறைச்சி கடைகள் உள்ளிட்ட 104 கடைகள் உருவாக்கப்பட்டு, தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மனுக்கள் பெறப்படுகிறது. முதலமைச்சர் விஜய் அவ்வப்போது தொகுதிக்குச் சென்று குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் சிட்கோ நகர் பிரதான சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள சர்மா நகர், எம்.கே.பி. நகரில் சென்ட்ரல் அவென்யூ சாலை சந்திப்பிலும், எஸ்.எம்.நகர் பிரதான சாலையிலும், எம்.கே.பி. நகர் பஸ் நிலையத்திற்கு எதிரே எஸ்.எம்.நகர் பிரதான சாலையிலும், 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், பெண்களின் பாதுகாப்பிற்காக கட்டுப்பாட்டு அமைப்பு, வைபை வசதியுடன் நவீன பஸ் நிறுத்த நிழற்குடைகள் கட்டப்பட்டு வருகிறது.
சிட்கோ சாலையில் உள்ள வாசுகி நகர் பூங்காவில் ரூ.1.08 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ரப்பர் தளம், விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.
சர்மா நகரில் ரூ.1.31 கோடி செலவில் உடற்பயிற்சி கருவிகள், நடைபாதை பேவர் பிளாக், கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பணிகள், ரூ.1.42 கோடி செலவில் குத்துச் சண்டை வளையம், இழுவை துணி கூரையுடன் கூடிய பார்வையாளர் மாடம் போன்ற பணி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர் கலைக்கல்லூரியில் 6,765 சதுர மீட்டர் பரப்பளவில் கிரிக்கெட் வலை பயிற்சி தளங்கள், கைப்பந்து விளையாட்டு வசதிகள் அமைக்கப்படுகின்றன.
37-வது வார்டில் மாநகராட்சியில் பள்ளி 2 வகுப்பறைகள், கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. 34-வது வார்டுக்குட்பட்ட கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ரூ.1.72 கோடி செலவில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளின் ஒரு பகுதியாக 498 மரங்கள் நடப்பட்டுள்ளன.
35-வது வார்டில் இன்டர் லாக் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாஸ்திரி நகர், சர்மா நகர் கால்வாய் சந்திப்பில் ரூ.2.95 கோடி செலவில் சுற்றுச்சுவர் உயர்த்தி கட்டும் பணி நடக்கிறது. வார்டு அலுவலக கட்டிடம், சமுதாயக்கூடம், மழை நீர் வடிகால்கள், நீர் தேக்க தொட்டிகளுடன் கூடிய மோட்டார் அறை அமைக்கப்படுகிறது.
மேலும் முத்தமிழ் நகர் கிழக்கு அவின்யூ பகுதியில் ரூ. 4.73 கோடி செலவில் புதிதாக மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் கட்டப்படுகிறது. இதில் 78 காய்கறி கடைகள் 24 மீன் இறைச்சி கடைகள், மீன் வெட்டுவதற்கு 2 கடைகள் உள்ளிட்ட 104 கடைகள் அமைக்கப்படுகிறது. ரூ.41.66 கோடியில் பணிகள் நடக்கிறது.
இந்தப் பணிகளை இணை ஆணையாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மண்டல அலுவலர் ராஜ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.