முதலமைச்சர் வருகையின் போது எழுந்து நிற்க வேண்டுமா?- காரசார விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்

முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
Published on

சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை என்று சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் வரும்போது அனைவருக்கும் வணக்கம் தெரிவிப்பது வழக்கம். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரை நேருக்கு நேர் முகம் கொடுத்து பார்ப்பதில்லை. வணக்கமும் தெரிவிப்பதில்லை.

இது பற்றி அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சருக்கு (ஓ.பி.எஸ்)சிறிய வேண்டுகோள். எங்களுக்கு எப்படி முதலமைச்சர் அறிவுரை வழங்கினாரோ அதைப் போலவே எதிர்க்கட்சித் தலைவருக்கும் நீங்கள் கண்ணியம் பற்றி அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

8 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் வரும் போது அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை கொடுக்கும் கண்ணியத்தை சொல்லித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்தினார்.

உடனே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, எதிர்க்கட்சித் தலைவரை பற்றி அமைச்சர் சொல்கிறார். திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தது இல்லை. எனவே அது ஒரு குற்றம் இல்லை. அது அவரவர் எண்ணம் நடைமுறை.

எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என சொல்லி பேசுவதெல்லாம் தேவையற்றது என்றார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பேரவைத் தலைவர் வரும் போது மட்டுமே அவை உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும். முதலமைச்சர் நேராக தனது இருக்கைக்குச் சென்று வணக்கம் சொல்வது தான் மரபு. முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சபாநாயகர் விளக்கம் அளிக்கையில், சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. சட்டசபைக்குள் முதலமைச்சர் வந்த போது எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அவைக்கு முதலமைச்சர் வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிப்பது அவரவர் விருப்பம், கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com