

மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல், சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் தனியார் நிறுவன ஊழியர். இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றுவிட்டனர். இதேபோல் அதே பகுதி ஆலப்பாக்கத்தை சேர்ந்த தவனேஷ் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருடு போனது.
இதுகுறித்து மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் சைதாப்பேட்டை ஆட்டுதொட்டி பகுதியை சேர்ந்த லோகேஷ் தனது கூட்டாளியான 18 வயதுக்கு உட்பட்ட சிறுவனுடன் சேர்ந்து கைவரிசை காட்டி 2 இடங்களிலும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.