

மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 11-ந்தேதி வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை (UoI v. Rohith Nathan) முடக்க, மறுஆய்வு/விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள மோடி அரசு, சமூக நீதியை சீர்குலைத்து OBC இளைஞர்களுக்கு வெளிப்படையான துரோகம் இழைக்கிறது.
* 1993 OM விதிகளின்படி கிரீமிலேயர் கணக்கீட்டில் பெற்றோரின் ஊதியம் சேர்க்கப்படக் கூடாது. DoPT-யின் 2004 கடிதம் பொதுத்துறை/தனியார் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எதிரான சட்டவிரோத பாகுபாடாகும்.
* பாதிக்கப்பட்ட தகுதியான தேர்வர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, 6 மாத காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
ஆனால், மோடி அரசோ இத்தீர்ப்பை அமல்படுத்தாமல் நழுவ சிறப்பு அமர்வை நாடுகிறது.
மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க.
சாக்குப்போக்குகள் கூறாமல், உச்சநீதிமன்றம் விதித்த 6 மாத காலக்கெடுவை முழுமையாகப் பின்பற்றுக.
இத்தீர்ப்புக்கு முன் OBC பிரிவில் விண்ணப்பிக்க முடியாமல் பொதுப் பிரிவில் தள்ளப்பட்ட தேர்வர்களுக்கு UPSC, CSE உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குக.
ஏழை எளிய OBC மாணவர்களுக்கும் EWS போன்ற பொருளாதார ரீதியிலான சலுகைகளை விரிவுபடுத்துக.
செல்லுபடியாகும் OBC-NCL சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பணி/சேர்க்கை நிலையை உயர்த்துக.
மாநில வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட OBC-NCL சான்றிதழ்களை நிராகரிப்பது மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும். சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மாநிலங்களின் சுயாட்சியையும், இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளும் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.