

கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., தவறான நோக்கத்தில் பெண் கலெக்டருக்கு குறுந்தகவல் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தி.மு.க.,வினரால் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல் என, எம்.எல்.ஏ., விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவிற்கு மதுபோதையில் தவறான நோக்கத்தில் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பியதாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து கலெக்டர், கட்சியின் மூத்த அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அதையடுத்து எம்.எல்.ஏ.வை நேரடியாக வரவழைத்து கலெக்டரிடம் வருத்தம் தெரிவிக்க வைத்து சமரசம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் ஒன்றாக பங்கேற்பதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், "இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரியிடம் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும்? நான் எவ்வித தவறான குறுந்தகவலும் அனுப்பவில்லை. இது தி.மு.க. ஐ.டி. விங் மூலம் பரப்பப்படும் வீண் பழி."
கடந்த தி.மு.க. ஆட்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த வேலு மற்றும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் எவ்வித அடிப்படை வசதியுமின்றி கொண்டு வந்த கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தை சுற்றி பிளாட் போட்டு பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளதாகவும், அந்த பஸ் நிலையத்தை மாற்ற தான் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் தன் மீது அவதூறு பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது முழுக்க முழுக்க தி.மு.க.வின் சதி என எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கூறியுள்ளார்.