

தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை வாரவிடுமுறைக்கு பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தாரகை கத் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சட்டசபையில் அவருக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி வரிசையில் நான்காவது வரிசையில் இருந்த தாரகை கத் பட், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் சவுமியா அன்புமணி அருகே அமர்ந்து உள்ளார்.
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தீர்த்த மலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அரசு அறிவிக்குமா என சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் எனவும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகைத்தருவதாக கூறினார்.
மேலும், தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உணவு கூடம் போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரை தயார் செய்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிலும் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவின் ஒப்புதலுடன் அரசுக்கு பெறப்படும் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.