

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., வி.சி.க., நாம் தமிழர் உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பகுஜன் சமாஜ் தவிர 12 கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டன.
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூட்டத்திற்கு வந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று த.வெ.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் வலியுறுத்தின. ஞானேஷ்குமார் பதவி விலகாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டால் சரியாக அமையாது என்றனர்.
இதை தொடர்ந்து 9 கட்சிகளும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றன.
இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தவறு நடைபெற்று உள்ளது. இந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினோம். நடந்த தவறுகளை முதலில் சரிசெய்ய வேண்டும். அதை செய்யாமல் மீண்டும் ஒரு திருத்தப்பணிகள் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் இல்லையென்றால் 160 தொகுதிகளுக்கு மேல் த.வெ.க. வெற்றி பெற்றிருக்கும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், தொடக்கத்தில் இருந்தே த.வெ.க. ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து முதலில் போராடியது த.வெ.க.தான். அந்த நிலைப்பாட்டில் தான் தற்போது இருக்கிறோம். தி.மு.க.வினர் அவர்களுக்கு தேவையான மாதிரி வாக்காளர்களை நீக்கினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.