

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்கவும், சாதிவாரி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. வெற்றி பெற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
த.வெ.க. அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், கடந்த ஜூன் 5 -ந்தேதியும், அதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கைக்கு முன்னதாக ஜூலை 16 ஆம் தேதியும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இந்த கூட்டம் பகல் 12.25 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் அமைச்சரவை முடிவு பற்றி அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது :-
இன்றைய கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் சமூக நீதி சர்வே நடத்துவது தொடர்பாக ஆணையம் அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார ரீதியாகவும் கணக்கெடுப்பு செய்யப்படும்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படும். இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. அது முடிந்ததும் பிப்ரவரி மாதத்தில் இந்த பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களிடம் துறை சார்பாகவும் முதலமைச்சர் கேட்டறிந்தார். மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றார்.
அனைத்து அமைச்சர்களிடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்டுள்ளார். அவர்கள் துறைகளில் இருக்கும் பிரச்சனைகளை, துறையின் செயல்பாடுகளை கேட்டரிந்தார். அதிகாரிகள் ஒத்துழைப்பு குறித்து கேட்டார்.
சமூக வலைத்தளத்தில் வெளியாகும் எதிர்மறை கருத்துகளால் தொய்வடையாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் பணியாற்றுமாறு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும். தாழம்பூர் பகுதியில் 600 ஏக்கர் நிலத்தில் 30 வருடங்களாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளது இதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆய்வு செய்வது முடிவு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அமைச்சர்கள் என்ன மாதிரி நடக்க வேண்டும் என்றும் மக்கள் கொடுக்கும் மனுக்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அமைச்சர்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது தொடர்பாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் அது தவறு. திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தவறு செய்தால் கேள்வி கேட்கக்கூடாது என்று நினைக்கிறார். ரூ.400 கோடி புகாரின் அடிப்படையில் தான் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.