கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் - அமைச்சர் காந்திராஜன்

ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
அமைச்சர் காந்திராஜன்
Published on: 
Summary

ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் வழங்கிய நாளில் இருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் காந்திராஜன் கூறினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாய கடன்

விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ரூ.5,000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் ஆண்டுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய காலக் கடன்கள் வழங்கப்படும்.

ரூ.5 லட்சம்

இத்திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் வழங்கிய நாளில் இருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடன்களை வழங்குவதற்கான விதிகள் வகுக்கப்பட்டு, கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2026–-2027ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடியும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.3 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கடன் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கவும், கடன் தகுதியைச் சரிபார்த்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றவும், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வசூல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகள், தங்களது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த ஊரகத் தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com