கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு பதில் அளிக்காமல் வேடிக்கை பார்ப்பதா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை எனறு டி.கே. சிவக்குமார் கூறியிருந்தார்.
முதலமைச்சர் விஜய்- எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் விஜய்- எடப்பாடி பழனிசாமி
Published on: 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரியில் தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட புரட்சித் தலைவர், அம்மா, தொடர்ந்து அம்மாவின் அரசு உச்சநீதிமன்றத்தில் பல சட்டப் போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது.

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டு, கர்நாடக அரசு காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை திறந்துவிடும் அளவையும் வெளியிட்டது.

பன்மாநில நதிகள் தேசிய சொத்து

மேலும், `பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது’ என்ற நவம்பர், 1991-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களின் வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்த பின்னர், கீழ்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலங்கள் எவ்விதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தெளிவான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து, `கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது’ என்ற நமது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும் 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.11.2018 ஆகிய நாட்களில் பிரமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக சந்தித்தும், மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினேன்.

டி.கே. சிவக்குமார் பேச்சு

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் `மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை’ என்று கூறியதாக, நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆறு மாத காலமாக காவிரியில் நமக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட உத்தரவிட்ட பிறகும், கர்நாடக அரசு தொடர்ந்து அதனை நிறைவேற்றாததுடன், தமிழ் நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உண்மைக்கு மாறான தகவலை பரப்பி தமிழக மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறார்.

மவுன சாமியார்

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்கிவிடலாம் என்ற தத்துவத்தை கடைபிடிக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு பதில் அளிக்க வக்கில்லாமல் வாய்மூடி மவுன சாமியாராக, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்காமல் இருக்கும் வாடகைக் கால் கூட்டணி அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

X